Sunday, June 3, 2018

என்றும் என் இதயத்தில்

27th May 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


சில நேரம் சண்டைகள்
சில நேரம் ஊடல்கள்;
கலையாத காதலுடன்
விளையாடும் தருணங்கள்..

தொலைதூரம் சென்றாலும்
துணையாகும் நினைவுகள்;
அருகாமை வந்தவுடன்
அழகாகும் தருணங்கள்...

மௌனத்தில் முத்தங்கள்
முத்தத்தின் சத்தங்கள்...
மொழியேதும் இல்லாமல்
உரையாடும் நிமிடங்கள்;

மதுவுண்ட மயக்கத்தில்
மலர்மீது இளைப்பாறும்
சிறுவண்டு அதுபோலுன்
மடிமீது தூக்கங்கள்...

மாற்றமே வையகத்தில்
நிரந்தரம் எனும் நியதி
ஏற்றமும் தாழ்மையும்
வாழ்க்கையின் ஒரு பகுதி;

ஆண்டுகள் உருண்டோடும்
அகவையும் பல கூடும்
இளமையும் முதுமையாய்
மாறும்நாள் வரக்கூடும்

எதுவந்த போதிலும்
எவர்சென்ற போதிலும்
விதிநமக்குப் பலவற்றை
வினைத்திட்ட போதிலும்

வென்றாலும் தோற்றாலும்
கொன்றாலும் எந்நாளும்
குன்றாத அன்புடைய
அன்றிலின் காதல்போல்

என்றும் என் இதயத்தில்
இன்று போல் நீங்காமல்
துடிப்பாக நீயும் - உன்
துணையாக நானும் ...


யார் இட்ட சாபம்?


21 May 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


பச்சைப் பசேலென்று பார்ப்பவர்கள் கண்குளிரும்

கழனிகளை விளைத்திட்ட அழகான காவேரி...



புள்ளினமும் மணம்நிறைந்த பூக்களும் மரங்களும்

அல்லியும் பங்கயமும் பூத்தாடும் காவேரி...



காலையும் மாலையும் பொன்னூஞ்சல் விளையாட

ஆலரசு வன்னிமரம் வழங்கிட்ட காவேரி....



சாலையின் இருபுறமும் சலங்கையிட்ட மங்கைபோல்

'சலசல'- யெனு மோசையுடன் வளைந்தாடும் காவேரி ...



ஆடிப்பெருக் கென்றால் மங்கையரும் குழந்தைகளும்

அறுசுவை சமைத்துண்டு களித்தாடும் காவேரி ...



தேடி அலைந்தாலும் கிடைக்காத செல்வத்தைத்

தன்வளமையால் உழவர்க்கு வழங்கிட்ட காவேரி...



தென்னகத்தின் அன்னையாம் பொன்னிப் பெருந்தாயை

சிறையிலே பிடித்ததார்? வருகையைத் தடுத்ததார் ?



யாரிட்ட சாபம் ?? இதுயார் செய்தபாவம் ??

பார்க்குமிட மெங்கெங்கும் வறட்சியின் கோலம்!!!



சோறுடைத்தச் சோழநாட்டின் சொர்கபூமி அதுதன்னில்

ஏர்பிடித்து உழவுசெய்ய நீரில்லை என்றநிலை !!!!



இந்நிலை மாறுமோ !! எம்குறை தீருமோ !!!

சொல்லொணா வறுமையும் பஞ்சமும் நீங்குமோ!!!!



மாண்டிட்ட வளங்களும் மறைந்திட்ட மகிழ்ச்சியும்

மீண்டும் நம்முடைய மண்ணிற்குக் கிடைக்குமோ !!!