Friday, November 20, 2009

பேதைமை


அகப்பட்ட
அரைநொடிக்குள்
அடுத்தவர்
அழிவினை
அரியணையாக்கி
ஆட்சிசெய்யத் துணியும்
அற்பர்களுக்கிடையில்
அடியவள்மட்டும்
சுகித்துக்கொண்டிருக்கிறேன்
அறியாமையென்னும்
சுழலில் சிக்கிச்
சிறுபிள்ளைத்தனமாய்!!!!!

Thursday, November 19, 2009

கனவு



உன்னோடு
கலந்துரையாடிய தருணம்
கனவென்று உணர்ந்திருந்தால்
கண்விழித்திருக்கவே மாட்டேன்..
கலைந்தது என்னுடைய
தூக்கம் மட்டும் அல்ல...
பூக்களாய் இதழில் பூத்திருந்த
புன்னகையும் தான்!!!

அறிவுரை



அத்தனைக்கும்
ஆசைப்படு....
அதனை
அடைய வேண்டும்
என்பதைத் தவிர!!!!

விண்ணப்பம்



அன்றொரு நாள்
அக்கினியாய் அவதரித்து
அழகிய உயிர்களை
அஸ்தியாக்கி
அகங்குளிர்ந்தாய்....

வேறொரு நாள்
வெள்ளலையாய்
வெகுண்டெழுந்து
எள்ளளவும் தயங்காமல்
எண்ணற்ற உடல்களை
உள்ளிழுத்துக்
குதூகலித்தாய்....


பின்னொரு நாள்
பூகம்பமாய்ப்
பூப்போன்ற மனிதர்களை
புதைகுழிக்குள் தள்ளிவிட்டுப்
புரியாமல் புன்னகைத்தாய்...

இப்படி
நாளொரு விதமாய்
நீ சீறுவதால்
நாங்கள்
நஷ்டப்பட்டவை
நாவிலடங்கா!!!!!

இன்பத்தை
எதிர்நோக்கும்
உள்ளங்களுக்கு
இன்னலை மட்டுமே
நல்கிடும்
இயற்கையே.....
எங்களை
இனியாவது
வாழவிடு!!!!!!!!!!!!!!

வீறு கொண்டு எழு



மனிதா
நீ சாதிக்கப்பிறந்தவன்
உனக்கு பாதகம் செய்யும்
பகைவரைக் கண்டு
பதறிவிடாதே...
மனிதா
நீ வாழப்பிறந்தவன்
உன்னை வீழ்த்த நினைக்கும்
உள்ளங்களை எண்ணி
உடைந்துவிடாதே...
மனிதா
நீ போற்றுதலுக்குரியவன்
உன்னைத் தூற்றத்துணியும்
உதடுகளை நினைத்துத்
துயரடையாதே...
மனிதா
உன் கண்ணீர் விலைமதிப்பற்றது
உன்மீது கருத்தில்லாதவருக்காகச்
சிந்தி அதனை வீணடித்துவிடாதே...
மனிதா
தோல்விகள் உன்னைத்
துரத்தும்பொழுது
துவண்டுவிடாதே
துள்ளிவரும் அலைகள்
போலத் துணித்தெழுந்திடு
ஏனென்றால்....
தோல்வி என்பது முடிவல்ல.....
வெற்றியின் முதற் பக்கம்!!!!!!!!!!

கேள்வி



விழித்திருந்து வேட்டையாடி
விடைகளைக் கண்டெடுத்து
விடுபெறும் வேளைதனில்
வாழ்க்கையே........................
நீ வினாக்களை மாற்றியதேனோ??????

ஆனந்தம்



உலகில் உள்ள வண்டுகளெல்லம்
என்னையே சுற்றி வட்டமிடுகின்றன...
தேனினும் இனிய உன் உன்னத
நட்பின் மழையிலல்லவா
நான் நனைந்துகொண்டிருப்பது!!!!

களங்கமில்லாத உன் நட்பின்
கதகதப்பில் குளிர்காய்வதால்
துன்பத்தால் ஈரமாகிய என்
இமைகள் வறண்டு,
இன்பத்தால் மட்டுமே
ஈரமாக தொடங்கிவிட்டது
என் இருண்ட இதயம்..!

வானுலகின் அழகிய தேவதைகளெல்லாம்
என் மீது அழுக்காறு கொண்டு
வாதிடுகின்றன,
வல்லவனாம் அந்த இறைவனிடம்...
சுவர்க்கதில் காணக்கூடிய களிப்பினை
பூவிலகில் பூத்திருக்கும்
பூவையான எனக்கு மட்டும் சொந்தமாக்கியதற்கு…

வலியைமட்டுமே கண்டிருந்த எனக்கு
வாழ்வின் வண்ணத்தையும் காட்டிய
விலைமதிப்பில்லாத உன் நட்பு
முறிந்திடும் நாளது நான்
இறந்திடும் நாளாகத்தான்
நிச்சயமாய் இருக்க முடியும்!!!!!

ஏக்கம்



களங்கமில்லா நட்பு,
கவலைமறந்த சிரிப்பு,
கண்ணீர் காணா கண்கள்
கனத்திடாத இமைகள்
அன்றாடம் களிப்பு
அவ்வப்போது படிப்பு
வரவில்லாச் செலவு
வாலிபத்தின் கனவு
வசந்தகாலக் குளிர்ச்சி
வானளாவிய மகிழ்ச்சி,
கேளிக்கையான நடிப்பு
வேடிக்கை நிறைந்த வகுப்பு
தேர்வுக்காலம் நெருங்குகையில்
சோர்வுக்காணும் மனத்துடிப்பு
தித்தித்த நொடிகள்
திகட்டாத நிமிடங்கள்
தீஞ்சுவையை அள்ளித்தந்த
தேன்தொனிந்த நாட்கள்...
ஆயுள்வரை மறக்கமுடியாத
ஆனந்த நினைவுகளை
ஆண்டுசிலவற்றில் அளித்துவிட்டு
மாண்டுபோன கல்லூரிகாலம்தனை
மீண்டும் திரும்பபெற
வேண்டுகிறது என் இதயம்!!!

பக்தி



அன்றாடம் அருள்வேண்டி
ஆண்டவனை அர்ச்சிக்கும்
அன்பன்,
அவசரமாய் வாயிற்கதவை
அடைக்கின்றான்.........
"அம்மா"-என அடிசில்வேண்டி
அழைத்திடும் ஆதரவற்றப்
பிச்சைக்காரனின்
குரலைக் கேட்டதும்!!!!!!!!!!!

நினைவு



அதிகாலையில்
ஆனந்தமாய்
பேருந்தின்
ஜன்னல்வழியே வீசிய
ஜில்லென்ற காற்றினை
நுகர்ந்து கொண்டிருந்த
எனக்கு,
அருகில் வந்த
நடத்துனரைக்
கண்டதும்தான்
நினைவுக்கு வந்தது...
கிளம்பும்பொழுது
எடுத்துவரத்தவறிய
என் கருப்புநிறக்
கைப்பை!!!!!!!!!!!!!

நேசம்



இயந்திரமாய்
இயங்கும் உடல்
மண்ணோடு...
இதயம் மட்டும்
பின்னோடிவரும்
உன்னோடு!!!!

ஊஞ்சல்



காற்றடித்து ஓய்ந்த பின்பும்
நிலுவைக்கு வர மறுக்கும் பலைகையாய்
நிழலாடிக் கொண்டிருக்கிறது....
ஆழ்மனதின்  சில நினைவுகள்!!!!

புதிர்



ஊமையாய்க் கிடந்த யென்னை
உயிர்த்தெழச்செய்தது
இறந்தகாலம்.....
அன்று,
உயிர்த்தெழுந்த யென்னை
இறந்துவிடத் தூண்டுகின்றது
நிகழ்காலம்.....
இன்று,
இருதலைக் கொள்ளியி னெறும்பாய்
பரிதவிக்கு மென்னை யினி யென்ன
செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது
எதிர்காலம்?????????????????

நட்பு



புத்தம் புதிதாய்க் கண்டோம்
தித்திக்கும் அனுபவங்கள் கொண்டோம்
சித்தத்தில் கலந்த நம் நட்பை
எத்திக்குச் சென்றாலும் மறவோம்!!!!!!

நிகழ்வு



என்
எதிர்பார்ப்புக்களின்
விரோதியாய்
விசுவரூபம்
எடுத்திடும்
உன்தன் பெயர்
மாற்றம் அல்ல...
மனதை உருக்கும்
ஏமாற்றம்!!!!!!!!!

தேவதை



என்
விழிகளில் அழுதிட
இதழ்களில் சிரித்திட
இமைகளில் உறங்கிட
இம்சையை இரசித்திட
வெற்றியில் களித்திடத்
தோல்வியில் துவண்டிட
முத்ததில் மகிழ்த்திட
சித்தத்தை செதுக்கிட
உதிரத்தைத் துடைத்திட
உயிருடன் கலந்திட
இன்பத்தைப் பெருக்கிட
இன்னலைக் களைந்திட
இறைவனால் பரிசளிக்கப்பட்ட
இனிய தேவதை நீ......
அம்மா,
உனக்கு நான் பட்ட கடனதை
எத்தனை பிறவி எடுத்தும்
தீர்க்க முடியாத நிலையில்
ஒன்று மட்டும்
உறுதி செய்கிறேன்....
உன்
உயிர்த்துளியாகக்கருதி
எனக்கு நீ ஆற்றியவைகளை
மறந்திடும் நாளொன்றில்
இந்த மகளுக்கு
இவ்வுலகம் வைத்திடும்
பெயர் பிணம்!!!!!!!!!!

வாழ்க்கை



விரும்பிச்சென்றால்
விலகிச்செல்லும்....
ஆதலின்,
விருப்புகளை
விடுத்துவிட்டு
விழிப்புணர்வுடன்
விரைந்திடுவோம்
விதி வழிநடத்தும்
வீடு பேறதனை
விழைந்து....

பெண்மனம்



ஆழ்கடலில்
முத்துக்குளித்த
வித்தகன்
தன் அழகிய
மனையாளிடம் கேட்கிறான்...
"மலரே.......
உன் மெளனத்தின்
பொருளென்ன???????"

மனம்



இல்லாத ஒன்றைத் தேடி.....
எல்லைகள் கடந்து செல்வதில்,
இருக்கின்ற எல்லாம் தொலைத்து....
இறுதியில்,ஏமாற்றக் குழியில் குதிக்கும்!!!!

தோழி



திசைமறந்து தெளிவின்றி
திரிந்துழன்ற எனக்குள்ளே
திருப்பத்தை ஏற்படுத்த
திவ்யமாய் வந்தவள் நீ!!!

பெண்மை



அகிலத்தில்
அன்பை
நிலைநிறுத்த
ஆண்டவன்
படைத்திட்ட
அட்சய பாத்திரம்
பெண்மை......
அவளைப்
பேணிக் காத்தல்
ஆணுக்குப் பெருமை!!!!

தேடல்



தொலைந்த என் இலக்கினைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்-விதியே
நீ விளக்காக அமையாவிடினும்
விலக்காக அமைந்து விடாதே!!!!!!!

நிஜம்



அம்மா என அழைக்கும்
அன்பு மகனின் குரல்
அத்தை என விளிக்கும்
ஆசை மருமகளின் அரவணைப்பு
பாட்டி யென பாசமாய்ப்
பேசும் பால்மணம் மாறாத
பச்சிளம் பேத்தி..
அள்ள அள்ளக் குறையாத
இவர்களின் அன்புக்கடலில்
திளைத்துக் கொண்டிருந்த நான்
திடுக்கிட்டு விழித்தேன்...
கலீர் எனக் காலையில் அடித்த
எங்கள் முதியோர் காப்பக
மணியின் ஒலியில்!!!!!!

விடை



புரியாத ஒன்றைப்
புரிந்துகொண்ட பிறகு
புரிந்தவை அனைத்துமே
புதிராகப் போயிற்று!!!!!

பொய்



எட்டி நின்று காண்கையிலே
விட்டு விலகி இருந்தபோதும்
கட்டி யணைத்துக் களிப்பதுபோல்
காட்சி யளிக்கும் "தொடுவானம்"!!!!

நடிப்பு



நாடகம் தொடங்குகையில்
நானதில் நடிக்கவில்லை;
நான் நடிக்கத் தொடங்கியதும்
நாடகம் நிலைக்கவில்லை;
ஒருபோதும் அரங்கேறாக்
காட்சியென உணர்ந்த பின்னும்,
என் ஓரங்க வேடம் மட்டும்
உள்ளத்தில் கலையவில்லை!!!!!!

தியாகம்



என்னை அழித்துத்தான்
இந்த உலகை நீ
காணுவாயாகில்
உனக்காகக்
உருகத்தயாராகிறேன்
கரையும் சிறு
மெழுகுவர்த்தியாய்!!

உறவு



உனக்கும் எனக்குமான
இடைவெளியில் இருப்பது
வேறொன்றும் இல்லை...
நம் நெருக்கத்தைத் தவிர!!!!!!

பிரிவு



அன்று...
வசந்ததின் நிழலில் குளிர்ந்தோம்
வானவில் போல இருந்தோம்
விடைபெறும் வேளை வரவே
வேதனையோடு பிரிந்தோம்...
இன்று....
நிலமென இருந்த மனதில்
விதையென விழுந்த நட்பால்
மரமென வளர்ந்த நினைவை
மனதிற்குள் தாங்கு கின்றோம்!!!!!

பேச்சு



நீ கேட்பதற்காக நான் காத்திருக்க..
நான் சொல்வதற்காக நீ காத்திருக்க...
இருவரில் "யார் முதலில் முறிப்பது???"-என
இருவருமே மெளனத்தின்
பிடியில் சிக்கியிருக்க...
இப்படித்தான் ,
நமக்குள் பல
கருத்துப்பரிமாற்றங்கள்
நிகழ்கின்றன...
வார்த்தைகள் இல்லாத
கலந்துரையாடல்களால்!!!!

பேறு



யாரிடமேனும் சொல்லிவிட்டால்
மனச்சுமை குறையுமென்பார்கள்....
எனக்கு உன்னிடம் கூடச்
சொல்ல மனமில்லை...
உன்னைச் சுமப்பதையே
சுகமாகக் கருதுகின்றமையால்!!!!