Sunday, August 19, 2018

எனக்கான தருணங்கள்

15th ஜூலை 2018 அன்று  'வல்லமை' மின்னிதழில் இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




கரம் பிடித்த நிமிடம் முதல்
உயிரே உன் துணைவி யாக;
கரு வினிலே சுமக்கா விடினும்
உன் அன்னையை என் தாயாக;
கல்வி கேள்வி நல்கா விடினும்
உன் தந்தையை என் தகப்பனாக;
ஒரு வயிற்றில் பிறக்கா விடினும்
உன் சகோதரியை என் தங்கையாக;
மைத்துனன் கொழுந்தன் மாமன் மாமி
தமையன் தமைக்கை மற்றும் மருகன்
என் றுன்னுற வினரனை வரையும்
யென்னுறவாய் நெஞ்சில் சுமந்து கொண்டு ;
உன் இல்லத்தில் உன் இடத்தை
நிரப் பிடும் நற்பணி யேற்றேன் !!!
என்ன வனே யென்னை யீன்ற
அன்னை தந்தை இரு வருடன்;
தன் னலம் சிறிதும் இன்றி
எம் நன்மை பேணும் தோழியுடன்;
கன்னம் தொட்டு என்னைக் கொஞ்சும்
அண்ணன் தம்பி அனைவருடன்;
ஆசை யுடன் சில நொடிகள்
உரை யாடக் கூடு மென்னில்….
நீயாக நான்மாறி நானாற்றும் பணிஓய்ந்து
அவரவர் தேவைகளை மருமகளாய்ப் பூர்த்திசெய்து
உறவினர் குழுமியுள்ள உன்னகத்தின் புறம்வந்து
நானாக நானிருக்கும் எனக்கான தருணங்கள் !!!

Saturday, August 18, 2018

மழை இரவு

17th ஜூலை 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




அடைமழை இரவு; அதிலொரு கனவு 
எனைமட்டும் உயிராய் நினைந்திடும் உறவு;

தனிமையில் நிலவு; தவித்திடும் பொழுது 
துணையென பொழியும் கருணையும் அழகு 

குழந்தையின் சிரிப்பாய் குளிர்ந்திடும் மனது
பொழிந்திதும் அழகில் மகிழ்ந்திடும் இரவு

கொடுந்தண லதனில் புழுங்கிடும் பொழுது 
கடுங்குளிர் வழங்கும் துளிகளும் இனிது 

நெடுந் தனிமைகளைக்  களைந்திட  விழைந்து  
உறவெனப் புகுந்தாய் உயிருக்குள் நுழைந்து 

மழை கண்டவுடனே மேகங்கள் கொண்டு 
அகம் மறைத்திடுமே முழுமதி விரைந்து 

உனைக் கண்டவுடனே விரல்களும் குவிந்து 
முகம் மறைத்திடுமே வெட்கத்தில் குனிந்து 

பிரிவென்ப தொன்று நிகழ்வதன் கருத்து 
உறவென்ப ததனைப் புதுப்பிக்கும் பொருட்டு 

மழையொழிந்த பின்னும் ஒளிர்ந்திடும் நிலவாய்
உன் நினைவுகளுடனே நிறைந்திடும் மனது  !!!!

ஒரு முறையேனும்

25th ஜூன் 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


ஆடையக வாசலிலே
ஒய்யாரமாக நிற்கும் நீ...
அணிகலன்கள் அழகு சேர்க்க
ஆடைகளும்  புத்தம் புதிதாய் !!!
உன் பாதங்களோ
பன்மடங்கு விலையுயர்ந்த
பாதுகைகளுக்குக் சொந்தக்காரனாய் !!!
சுட்டெரிக்கும் வெப்பதில்
மிதியடியும் இன்றி
மேலங்கியும் இன்றி - என்
பிட்டத்தைச் சுட்டிக்காட்டும்
வட்டமான இரு ஓட்டைகள்
கொண்ட காற்சட்டையுடன்
 அரை நிர்வாணமாய்
உனை வெறித்துப்பார்த்திடும் நான்
இறைவனிடம் கேட்பது
ஒன்றே ஒன்றுதான்!!!

உயிரை எனக்குத் தந்த இறைவன்
உடையை மட்டும் உனக்குத் தந்ததேன் !!!

கண்ணாடி பேழைக்குள்
காட்சிப் பதுமையாய்  நிற்கும்
உன் உடலை அலங்கரிக்கும் ஆடைகள்
ஒரு முறையேனும் அதனை
ஏக்கத்தோடு காணும்
எனது உடலைத் தழுவ
வாய்த்திடும் நாள் வருமோ!!!



வெல்லும் சொல்

11th June 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளத்தில் விடம்கொண்டு 
உதட்டினில் மதுக்கொண்டு 
கள்ளத்தனம் கலந்து
மொழிந்திடும் மனிதருள்;
வெள்ளை மனத்தோடு 
எள்ளளவும் வன்மமின்றி 
பிள்ளை நீ சொல்லும் சொல்
பேரின்பம் நல்கும் சொல்...

இதயத்தில் கனிவன்பும் 
இதழ்களில் பணிவன்பும் 
எவர் மனமும் நோகாத 
இனிமையும் மென்மையும்.. 
அமுதமே வார்த்தைகளாய் 
அழகாய் நீ விளம்பும் சொல் 
அனைவரின் மனங்களையும் 
அக்கணமே வெல்லும் சொல் 

பிள்ளை உன் சொல்லாலே 
உள்ளமும் குளிருதே 
கல்லதும் கரையுதே 
கடவுளும் மகிழுதே 
எல்லையில்லா இன்பம் 
என்னுள்ளே நிரம்புதே 
கொள்ளை கொண்டென்மனம் 
உன் வசம் திரும்புதே 

குழலோசை சுவைகுன்றும்
குயிலோசை செவிவெறுக்கும்  
உன் குரலோசை அதன்முன்னால் 
கிளி தோற்றுத் தலை குனியும் 
அழுகையும் சிரிப்பாகும்
பிழைகளும் கவியாகும் 
குழவி உன்மொழி கேட்டால் -மனக் 
குறைகளும் மறைந்தோடும்!!!!

                                         

வாழ்க்கை யெனும் போர்க்களம்

3rd June 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


கையில் பிடிக்கும் நொடிக்குள்ளே
காற்றாய் பறக்கும் தும்பிபோல்
பொய்யாய் போகும் கனவுகளை
நெஞ்சில் நிதமும்  சுமக்கின்றோம்

எட்டாக் கனியென  இருந்தவைகள்
எட்டிப் பிடித்திடும் தருணத்தில்
தட்டிப் பறித்திடும் காலத்தால்
ஏமாற்றத்தில் திளைக் கின்றோம்

நிலையே இல்லா வாழ்வுதன்னில்
நித்தமும் ஆயிரம் கோட்டைகளை
கட்டிக் கொண்டே  இருக்கின்றோம்
இயல்பை ஏனோ மறக்கின்றோம்

காலச் சக்கரச் சுழற்சிக்குள்
கடந்து செல்லும் நிகழ்வுகளின்
கைதி யாகித் தவிக்கின்றோம்
சிக்கிச் சிறையில் கிடக்கின்றோம்

வாழ்க்கை என்பது போர்க்களமே
சூழ்ச்சியும் திருப்பமும் நிறைந்ததுவே
வீழ்ச்சியும்  எழுச்சியும் தொடர்கதையாய்த்
துரத்தி வருவது சத்தியமே

சோதனை பலவகை வந்தாலும்
தோல்விகள் துரத்தி அடித்தாலும்
துவளா மனதிட மதுகொண்டால்
வெற்றி என்பது சாத்தியமே !!!

Sunday, June 3, 2018

என்றும் என் இதயத்தில்

27th May 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


சில நேரம் சண்டைகள்
சில நேரம் ஊடல்கள்;
கலையாத காதலுடன்
விளையாடும் தருணங்கள்..

தொலைதூரம் சென்றாலும்
துணையாகும் நினைவுகள்;
அருகாமை வந்தவுடன்
அழகாகும் தருணங்கள்...

மௌனத்தில் முத்தங்கள்
முத்தத்தின் சத்தங்கள்...
மொழியேதும் இல்லாமல்
உரையாடும் நிமிடங்கள்;

மதுவுண்ட மயக்கத்தில்
மலர்மீது இளைப்பாறும்
சிறுவண்டு அதுபோலுன்
மடிமீது தூக்கங்கள்...

மாற்றமே வையகத்தில்
நிரந்தரம் எனும் நியதி
ஏற்றமும் தாழ்மையும்
வாழ்க்கையின் ஒரு பகுதி;

ஆண்டுகள் உருண்டோடும்
அகவையும் பல கூடும்
இளமையும் முதுமையாய்
மாறும்நாள் வரக்கூடும்

எதுவந்த போதிலும்
எவர்சென்ற போதிலும்
விதிநமக்குப் பலவற்றை
வினைத்திட்ட போதிலும்

வென்றாலும் தோற்றாலும்
கொன்றாலும் எந்நாளும்
குன்றாத அன்புடைய
அன்றிலின் காதல்போல்

என்றும் என் இதயத்தில்
இன்று போல் நீங்காமல்
துடிப்பாக நீயும் - உன்
துணையாக நானும் ...


யார் இட்ட சாபம்?


21 May 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


பச்சைப் பசேலென்று பார்ப்பவர்கள் கண்குளிரும்

கழனிகளை விளைத்திட்ட அழகான காவேரி...



புள்ளினமும் மணம்நிறைந்த பூக்களும் மரங்களும்

அல்லியும் பங்கயமும் பூத்தாடும் காவேரி...



காலையும் மாலையும் பொன்னூஞ்சல் விளையாட

ஆலரசு வன்னிமரம் வழங்கிட்ட காவேரி....



சாலையின் இருபுறமும் சலங்கையிட்ட மங்கைபோல்

'சலசல'- யெனு மோசையுடன் வளைந்தாடும் காவேரி ...



ஆடிப்பெருக் கென்றால் மங்கையரும் குழந்தைகளும்

அறுசுவை சமைத்துண்டு களித்தாடும் காவேரி ...



தேடி அலைந்தாலும் கிடைக்காத செல்வத்தைத்

தன்வளமையால் உழவர்க்கு வழங்கிட்ட காவேரி...



தென்னகத்தின் அன்னையாம் பொன்னிப் பெருந்தாயை

சிறையிலே பிடித்ததார்? வருகையைத் தடுத்ததார் ?



யாரிட்ட சாபம் ?? இதுயார் செய்தபாவம் ??

பார்க்குமிட மெங்கெங்கும் வறட்சியின் கோலம்!!!



சோறுடைத்தச் சோழநாட்டின் சொர்கபூமி அதுதன்னில்

ஏர்பிடித்து உழவுசெய்ய நீரில்லை என்றநிலை !!!!



இந்நிலை மாறுமோ !! எம்குறை தீருமோ !!!

சொல்லொணா வறுமையும் பஞ்சமும் நீங்குமோ!!!!



மாண்டிட்ட வளங்களும் மறைந்திட்ட மகிழ்ச்சியும்

மீண்டும் நம்முடைய மண்ணிற்குக் கிடைக்குமோ !!!