Saturday, August 18, 2018

வாழ்க்கை யெனும் போர்க்களம்

3rd June 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


கையில் பிடிக்கும் நொடிக்குள்ளே
காற்றாய் பறக்கும் தும்பிபோல்
பொய்யாய் போகும் கனவுகளை
நெஞ்சில் நிதமும்  சுமக்கின்றோம்

எட்டாக் கனியென  இருந்தவைகள்
எட்டிப் பிடித்திடும் தருணத்தில்
தட்டிப் பறித்திடும் காலத்தால்
ஏமாற்றத்தில் திளைக் கின்றோம்

நிலையே இல்லா வாழ்வுதன்னில்
நித்தமும் ஆயிரம் கோட்டைகளை
கட்டிக் கொண்டே  இருக்கின்றோம்
இயல்பை ஏனோ மறக்கின்றோம்

காலச் சக்கரச் சுழற்சிக்குள்
கடந்து செல்லும் நிகழ்வுகளின்
கைதி யாகித் தவிக்கின்றோம்
சிக்கிச் சிறையில் கிடக்கின்றோம்

வாழ்க்கை என்பது போர்க்களமே
சூழ்ச்சியும் திருப்பமும் நிறைந்ததுவே
வீழ்ச்சியும்  எழுச்சியும் தொடர்கதையாய்த்
துரத்தி வருவது சத்தியமே

சோதனை பலவகை வந்தாலும்
தோல்விகள் துரத்தி அடித்தாலும்
துவளா மனதிட மதுகொண்டால்
வெற்றி என்பது சாத்தியமே !!!

No comments:

Post a Comment