Saturday, August 18, 2018

மழை இரவு

17th ஜூலை 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




அடைமழை இரவு; அதிலொரு கனவு 
எனைமட்டும் உயிராய் நினைந்திடும் உறவு;

தனிமையில் நிலவு; தவித்திடும் பொழுது 
துணையென பொழியும் கருணையும் அழகு 

குழந்தையின் சிரிப்பாய் குளிர்ந்திடும் மனது
பொழிந்திதும் அழகில் மகிழ்ந்திடும் இரவு

கொடுந்தண லதனில் புழுங்கிடும் பொழுது 
கடுங்குளிர் வழங்கும் துளிகளும் இனிது 

நெடுந் தனிமைகளைக்  களைந்திட  விழைந்து  
உறவெனப் புகுந்தாய் உயிருக்குள் நுழைந்து 

மழை கண்டவுடனே மேகங்கள் கொண்டு 
அகம் மறைத்திடுமே முழுமதி விரைந்து 

உனைக் கண்டவுடனே விரல்களும் குவிந்து 
முகம் மறைத்திடுமே வெட்கத்தில் குனிந்து 

பிரிவென்ப தொன்று நிகழ்வதன் கருத்து 
உறவென்ப ததனைப் புதுப்பிக்கும் பொருட்டு 

மழையொழிந்த பின்னும் ஒளிர்ந்திடும் நிலவாய்
உன் நினைவுகளுடனே நிறைந்திடும் மனது  !!!!

No comments:

Post a Comment