Tuesday, November 7, 2017

புதிர்

மனமெங்கும் ரணமாய் மாறிற்று இன்று
மருந்திடக் காலம்தான் வந்திடுமோ?
மருந்திட வந்திடும் காலம் அதனையும் - என்
கலிதான் விரட்டி யடித்திடுமோ!!!

நினைப்பது ஒன்று நிகழ்வது ஒன்று
குழப்பத்தால் சூழ்ந்திட்ட வாழ்வதனில்
நிம்மதி ஒளியை என்மனம் அடைய
காலம்தான் பாதை காட்டிடுமோ!!!

எங்கெங்கு தேடினும் எவ்விடம் ஓடினும்
அமைதியை மட்டும் காண வில்லை
என்னுள்ளே உள்ளது என்கின்றர் அறிஞர்
எங்குள்ள தென்பது விளங்கவில்லை..

காலமிட்ட முடிச்சுகளைக் கடவுள்  அவிழ்ப்பாரென
கோல  மிட்டுரைக் கின்றன  சாத்திரங்கள்
ஓலமிடும் என்குரல் கேட்டிட விழைகின்றேன்
ஞாலத்தின் முதல்வனான இறைவனுக்கு !!!!

Thursday, August 17, 2017

தலைமுறை



வையகம் என்ன வென்று
வாழ்ந்து பார்த்து அனுபவித்த
என் நாட்களவை நிறைவடையும்
வயோதிக வேளை தன்னில்

என்ன தான் உலகென்று
வாழ்ந்து பார்க்க வந்தவன் நீ
என் னுலகாக மாறியெனைப்
புதுப்பித்து உயிர் ப் பித்தாய் ….

என்னுள் மறைந் திருக்கும்
குழந்தை யதை எழுப்பிவிட்டு
உன்னுள் தொலைக்கச் செய்யும்
மாயம் உந்தன் விளையாட்டு !!!!

எத்தனை கவலைகள்
எண்ணத்தில் இருந்தாலும்
அத்தனையும் மறைந்து போகும்
முத்தே உன் மொழிகேட்டு….

தத்தித் தத்தி நடந்து வந்து
“தாத்தா” யென்றழைக் கையிலே
என் “தலைமுறை”- யே உனைவாரி
முத்தம் வைக்கத் தோன்றுதடா

தாத்த னுக்கும் பேரனுக்கும்
நடுவி லிருக்கும் நல்லுறவு
தொடக்கத் திற்கும் முடிவிற்குமான
தொடர்கதையின் ஒரு தொகுப்பு

ஓய்வெடுக்கும் வயதி லென்னை
ஓயாமல் உன்தன் பின்னே
ஓட வைக்கும் ஓவியமே கேள்
ஒர் அவாவும் எனக்குள் ளுண்டு

அன்று துளிர்த் தெழுந்து
அகிலம் காண ஆசைப்படும்
பச்சைப் புல்வெளி மேல்
படர்ந்திடும் ஓர் சருகாய் …

அனைத்தும் அடங்கி ஆடி ஓய்ந்து
உடல்விட்டு எந்தன் உயிர்நீங்கும் பொழுது
வலி யேதும் அறியாமல்; உனை நீங்கிப் பிரியாமல்
இன்பமே எல்லை யென்று இளைப்பாற வேண்டும்
.
.
.
.
உன் மடிமீது நானும்
என் தலை கோதி நீயும் !!!!

ஒரு பசுவின் சுய சரிதை



"வல்லமை" (ISSN: 2348 – 5531)  மின்னிதழின்  'படக்கவிதைப் போட்டி 123'-ல் சிறந்த கவிதையாகத் இக்கவிதை தேர்ந்தேடுக்கப் பட்டது என்பது குறிப்பிடக் தக்கது

______________________________
‘கோ’ என்றால் குலமகளாகக்
கொண்டாடிய தேசம் ஒன்றில்
கன்றுக்குக் குட்டியாக நானும்
அன்றொரு நாள் அவதரித்தேன்!

பச்சைப்பசேல் கழனித் தோட்டம்
படுத்துறங்க மாட்டுத் தொழுவம்
பழகித் திரிய அத்துணைச் சொந்தம்
பண்ணை வீட்டில் நாளும் இன்பம்!

வளமை எல்லாம் வானில் மறைய
வந்ததன்றோ வறட்சியும் பஞ்சம்
நதி நீரைத் தடுத்க ஓர் கூட்டம்
எரிவாயு எடுக்க ஓர் கூட்டம்

அவரவர் செயும் அரசியல் சூதில்
பகடைக் காயானதினாலே
பல தூரம் நடந்து நடந்து
அபலை நான் நகரம் சேர்ந்தேன்

சிறு புல்லும் தென்பட வில்லை
சீண்டுபவர் எவரும் இல்லை
பெரு நகரின் பேருந்துக் கிடையில்
நடப்பதுவே தினம் ஒரு தொல்லை

அடைக்கலம் புகத் தொழுவமும் இல்லை
அணைத்துக் கொள்ள உழவனும் இல்லை
எஞ்சிய தென்றன் உணவாய் இன்று
எச்சில் குப்பை கழிவுகள் மட்டும்!!

Thursday, August 3, 2017

அறிவுரை

"வல்லமை" (ISSN: 2348 – 5531)  மின்னிதழின்  'படக்கவிதைப் போட்டி 120'-ல் சிறந்த கவிதையாகத் இக்கவிதை தேர்ந்தேடுக்கப் பட்டது என்பது குறிப்பிடக் தக்கது
_________________________________________

சின்ன சின்ன விரல்கள் கொண்டு
சிறு கோல மிடும் பைங்கிளியே
சிறிய தொரு அறிவுரையை
செவி மடுத்துக் கேட்டிடுவாய்…

இன்று,
உன் எண்ணமதை ஒருங்கிணைத்து
வண்ண வண்ண நிறங்கள் தீட்டி
வாசல் கோலம் நிறைவு செய்து
வீட்டி னுள்ளே நுழைந் திடலாம்

ஆனால்
வாழ்க்கை கோலம் என்னவென்று
வஞ்சி உனக் கெடுத் துரைக்க
நாளை எனும் நாட்கள் கொண்ட
வருங் காலம் காத்திருக்கு!!!

தாயாக  ஒரு கோலம்,
தாரமாக மறு கோலம்,
வன்மம் கொண்ட கயவர் காணின்
வீறு கொள்ளும் சினக் கோலம்..

நெடு தூர பயணங்கள்
உனக்காகக் காத்திருக்க
தடம் புரண்டு செல்லாமல்
தரணியதை நீயும் வெல்லு

வாழ்க்கை செல்லும் பாதையிலே
பின் தொடர்ந்து போவதிலே
வழித்தடத்தை தொலைக்கின்றோம்
நம் மரபுகளை மறக்கின்றோம் !!!!

சின்ன சின்ன மகிழ்ச்சிகளை
சிறைப் படுத்தி வைக்கின்றோம்
நம்மை நாமே மறக்கின்றோம்
மாற்ற மதில் கலக்கின்றோம்

ஆதலால்

ஓலம் பல வரினும்,
ஞாலம் எது தரினும்;
உன்னை நீயே தொலைக்காமல்
உன் தனித்துவத்தை இழக்காமல்

உன் காலம் உள்ள அதுமட்டும்
உயிர் காற்று உள்ள அதுமட்டும்
இன்று போல என் றென்றும்
கோல மிட்டு மகிழ்ந்து இரு !!!!!

Sunday, June 18, 2017

சித்தி

தன் கருவில் சுமக்காவிடினும்
தமக்கை பெற்ற மகவு தம்மை
இமைக்குள் வைத்து பாதுகாத்து
இன்பமுறும் மற்றோர் அன்னை !!

அப்பா

ஐயிரண்டு திங்கள் 
அடிவயிற்றில் சுமந்தவள் 
அன்னை யாகினும் ...
அகிலத்தில் 
தன்னைவிட 
உயர்ந்த இடத்தைத் 
தம் பிள்ளைகள் 
அடைய வேண்டுமென 
அன்றாடம் அவர்களை 
இரு தோள்கள் மேலே 
சுமப்பவர் தந்தை யாவார்...

Wednesday, June 14, 2017

குறட்டை




எவ்வளவு சத்தமாக ஒலித்த பொழுதும்
தனது செவிகளைத் துளைக்காமல்
அடுத்தவர் உறக்கத்தை மட்டும்
குறிபார்த்துக் கெடுக்கும் ஆயுதம்....



Thursday, June 1, 2017

கருவில் தொலைந்த குழந்தை

12 May 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது





"அந்த மூன்று நாட்கள்"
வந்திடத் தவறிய
 நாள் முதல் ....
ஆணோ ? பெண்ணோ?
அழகதன்  உருவோ
கறுப்போ? சிகப்போ?
கார்வண்ணன் நிறமோ ..

என்னைப் போலப்   பிறக்குமோ ?
"அவர்"- ஐப் போல இருக்குமோ ?

இருவருடைய  சாயலையும் ...
இணைத்துக்கொண்டு உதிக்குமோ??

அத்தை போல சிரிக்குமோ?
மாமன் போல முறைக்குமோ ?
சித்தி போல சிணுங்குமோ ?
தத்தை போல மொழியுமோ ?

என்று ஆசைப் பைஞ்சுதை மேல்
அன்புமனக் கற்களினால்
ஆகயாக் கோட்டையொன்றை
ஆவலுடன் கட்டி வைக்க…

என் உயிர்நிலையின் வாயிலாக
உயிரே..
ஓர்நாள்..
உனைப் பற்றிய
கனவுகள் அத்தனையும் 
உதிரமாக வழிந்தத (டி/ டா ) !!!!

மாளாத்துய ரென்று
மண்ணினிலே எதுவுமில்லை !!!
தீராக்கதை யொன்றை
தரணி யதும் கேட்டதில்லை!!!

ஆதலால்
"அம்மா" என்றழைத்து எந்தன்
"பெண்மை" யதை  நிறைவு செய்யப்
போன பாதை வழி யென்னிடம்
அதிவிரைவில் திரும்புவா யென்றென்
அடி வயிற்றின் மீதினிலே விழிவைத்துக் 
காத்துக் கிடக்கின்றேன்…..
மீண்டும்,
"அந்த மூன்று நாட்கள்"
வந்திதத் தவறிடும் நாளது  
வரும் வரையில் !!!!