Thursday, August 17, 2017

தலைமுறை



வையகம் என்ன வென்று
வாழ்ந்து பார்த்து அனுபவித்த
என் நாட்களவை நிறைவடையும்
வயோதிக வேளை தன்னில்

என்ன தான் உலகென்று
வாழ்ந்து பார்க்க வந்தவன் நீ
என் னுலகாக மாறியெனைப்
புதுப்பித்து உயிர் ப் பித்தாய் ….

என்னுள் மறைந் திருக்கும்
குழந்தை யதை எழுப்பிவிட்டு
உன்னுள் தொலைக்கச் செய்யும்
மாயம் உந்தன் விளையாட்டு !!!!

எத்தனை கவலைகள்
எண்ணத்தில் இருந்தாலும்
அத்தனையும் மறைந்து போகும்
முத்தே உன் மொழிகேட்டு….

தத்தித் தத்தி நடந்து வந்து
“தாத்தா” யென்றழைக் கையிலே
என் “தலைமுறை”- யே உனைவாரி
முத்தம் வைக்கத் தோன்றுதடா

தாத்த னுக்கும் பேரனுக்கும்
நடுவி லிருக்கும் நல்லுறவு
தொடக்கத் திற்கும் முடிவிற்குமான
தொடர்கதையின் ஒரு தொகுப்பு

ஓய்வெடுக்கும் வயதி லென்னை
ஓயாமல் உன்தன் பின்னே
ஓட வைக்கும் ஓவியமே கேள்
ஒர் அவாவும் எனக்குள் ளுண்டு

அன்று துளிர்த் தெழுந்து
அகிலம் காண ஆசைப்படும்
பச்சைப் புல்வெளி மேல்
படர்ந்திடும் ஓர் சருகாய் …

அனைத்தும் அடங்கி ஆடி ஓய்ந்து
உடல்விட்டு எந்தன் உயிர்நீங்கும் பொழுது
வலி யேதும் அறியாமல்; உனை நீங்கிப் பிரியாமல்
இன்பமே எல்லை யென்று இளைப்பாற வேண்டும்
.
.
.
.
உன் மடிமீது நானும்
என் தலை கோதி நீயும் !!!!

No comments:

Post a Comment