Thursday, August 17, 2017

ஒரு பசுவின் சுய சரிதை



"வல்லமை" (ISSN: 2348 – 5531)  மின்னிதழின்  'படக்கவிதைப் போட்டி 123'-ல் சிறந்த கவிதையாகத் இக்கவிதை தேர்ந்தேடுக்கப் பட்டது என்பது குறிப்பிடக் தக்கது

______________________________
‘கோ’ என்றால் குலமகளாகக்
கொண்டாடிய தேசம் ஒன்றில்
கன்றுக்குக் குட்டியாக நானும்
அன்றொரு நாள் அவதரித்தேன்!

பச்சைப்பசேல் கழனித் தோட்டம்
படுத்துறங்க மாட்டுத் தொழுவம்
பழகித் திரிய அத்துணைச் சொந்தம்
பண்ணை வீட்டில் நாளும் இன்பம்!

வளமை எல்லாம் வானில் மறைய
வந்ததன்றோ வறட்சியும் பஞ்சம்
நதி நீரைத் தடுத்க ஓர் கூட்டம்
எரிவாயு எடுக்க ஓர் கூட்டம்

அவரவர் செயும் அரசியல் சூதில்
பகடைக் காயானதினாலே
பல தூரம் நடந்து நடந்து
அபலை நான் நகரம் சேர்ந்தேன்

சிறு புல்லும் தென்பட வில்லை
சீண்டுபவர் எவரும் இல்லை
பெரு நகரின் பேருந்துக் கிடையில்
நடப்பதுவே தினம் ஒரு தொல்லை

அடைக்கலம் புகத் தொழுவமும் இல்லை
அணைத்துக் கொள்ள உழவனும் இல்லை
எஞ்சிய தென்றன் உணவாய் இன்று
எச்சில் குப்பை கழிவுகள் மட்டும்!!

No comments:

Post a Comment