Thursday, April 18, 2013

குடும்பம்








ஆலமர நிழல் போல 
அழகானதோர்  கூறையின்  கீழ் 
அண்ணன் தம்பி ஐவர் மற்றும்  
அவர்தம் மனைவி மக்கள் சுற்றம் 
அழைத்ததும் ஓடிவரும்  ஐந்தாறு பணியாள் 
அறுசுவை சமைத்திடும் அடுக்குளை நளன்மார் 
ஆடு, மாடு, கோழி, குருவி 
அறிவுரை வழங்கிடும் கிழவன் கிழவி என 
அன்பின் இலக்கணமாய்த் திகழ்ந்த 
அன்றைய "கூட்டுக்குடித்தனங்கள்"
இன்றும் காணப்படுகின்றன...
வெறும் வரலாற்றுச் செய்திகளாய்ப் 
பத்திரிகைகளில் மட்டும் !!!!!

Wednesday, April 10, 2013

இன்றைய “பரதேசி”கள்







 



நம் முன்னோர்கள்
தேயிலைத்தோட்டத்தில் தம்
செந்நீரைச் சிந்தியதைக் கண்டு
கண்ணீர் விடுவதோடு மட்டும்
முடிந்துவிடவில்லை நம் கடமை...

சுதந்திரம் கிடைத்த பின்னும்
சொந்த மண்ணை விட்டுவிட்டு
வெள்ளையன் தன் வயிற்றைக்
கழுவப் படைத்திட்ட
பன்னாட்டு நிறுவனங்களில்
தன்னையே அர்ப்பணித்து
இரவு பகல் பாராமல்
எந்நேரமும் பணிபுரியும்

இன்றைய படித்த “பரதேசி” களாகிய நாம்
விழித்துக்கொள்வதில்
விதைக்கப்பட்டிருக்கின்றது
நம் நாட்டின்
விதியும்
விடிவுகாலமும் !!!!!

Tuesday, October 30, 2012

தொடர்கதை...

அம்மா,
விளையாட்டாய்
நான் கலைத்த
உன் பல நாள்
தூக்கங்களின்
விலை மதிப்பை

உணருகின்றேன்.....
கண்ணயர்ந்து தூங்குகையில்
என் கண்ணிமையைத்
திறந்து பார்க்கு மென்
கண்மணி யின்
குறும்பு தன்னில்!!!!!

Thursday, July 19, 2012

அவள்



பெண்ணின் பெருமையை உணர்வோம்- இந்த
மண்ணுலக மவளை மதித்திட செய்வோம்

செல்வத்தில் சிறந்த செல்வம்- அது
கள்ளம் கபட மிலா பிள்ளைச் செல்வம்
மழலை இல்லா மனிதன் வாழ்வில்
மகளாய்ப் பிறந்து மனமகிழ்  வளிப்பாள்

தனிமையும் வெறுமையும் சூழ்ந்து- ஒரு
துணையின்றி வாடும் ஆடவன் வாழ்வில்
இனிமையும் இன்பமும் சேர்க்கும்- நல்
துணையாய் வந்து துயரங்கள் களைவாள்

பொன்னையும் பொருளையும்  வேண்டி- பெரும்
போர்க்களம் செய்திடும் வையக மதனில்
தன்னலம் துளியும் இல்லா- ஒரு
அன்னையாய் அன்பினை அள்ளித் தருவாள்

அண்டத்தில் சிறந்தவள் பெண்ணே
அன்பினை வளர்ப்பவள் பெண்ணே
மங்கையை வணங்கிக் காத்தால்
வையகம் சென்றிடும் முன்னே...

Monday, February 27, 2012

கோரிக்கை

ஆண்டாண்டு
காலங்கள்
அகிலத்தில்
வாழ்ந்திட
அகவையை
வேண்டவில்லை
அரைநொடி
வாழினும்
அதுவரை
நீடிக்கும்
அமைதியை
வேண்டுகின்றேன்!!!

Sunday, September 5, 2010

உனக்காக...


பிறை நிலவாய் இருந்த என்னை
முழு மதியாய் மாற்றியதில்
"இறை"-யதனின் பொருளதனை
இவள் மனதில் புகுத்தி விட்டாய்
கரையதனைப் பிரியாத
கடலன்னை யதுபோல- என்
உயிருறையும் நொடி வரையில்
உனக்காகத் துடித்திருப்பேன்!

இயல்பு

தேடிச்செல்லுகையில்
தேவதைகள் தெரிவதில்லை
வாடி வருந்துகையில் வாழ்க்கை
 விடையளிப்பதில்லை
மாயம் உலகென்று
உணரும் வரை மனம் காணும்
காயம் தனையாற்றக்
காலம் முன் வருவதில்லை!